பெற்ற தாயை கத்தியால் வெட்டிக்கொலை செய்த மகன் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் தனது தாயின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 44 வயது மகனை கைது செய்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தாய் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தனது வீட்டுக்கு சென்ற மகன் தாயின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்த நிலையில் தாய் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து மகனுக்கும் தாயாருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாயாரை வெட்டி கொலை செய்த 44 வயது மகனை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment