வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் நியமனம்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சாா்பில் போட்டியிட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா நகர சபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு மேலும் இருவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய வவுனியா நகரசபைக்கு திருமதி நிருபா சச்சிதானந்தன் அவர்களும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு திரு பூலோகம் இந்திரன் அவர்களும்; சட்டத்தரணி துரைசிங்கம் ஜெயானந்தன் அவர்கள் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
வவுனியா நகர சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி நிருபா சச்சிதானந்தன் அவர்கள் வவுனியா சென்சுலான் முன்பள்ளியில் 10வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருவதுடன்,பெண் தலைமைத்துவ மகளிர் அமைப்பு ஒன்றின் மதவுவைத்தகுளம் பகுதியின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரு பூலோகம் இந்திரன் அவர்கள் வீரபுரம் கூட்டுறவு சங்க கிளை தலைவராகவும் மற்றும் வீரபுரம் ஆட்டோ சங்க தலைவர்,வீரபுரம் அரசடிப் பிள்ளையார் ஆலயத்தினுடைய தலைவர் மற்றும் சின்னத்தம்பனை கமக்காரர் அமைப்பின் தலைவராக பல்வேறுபட்ட சமூக,கிராமமட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment