Header Ads

test

தமிமீழ விடுதலைப்புலிகளின் இனச் சுத்திகரிப்பை எண்ணி தலை குனிவதாக தெரிவித்துள்ள சுமந்திரன்.

 தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். அந்தக் குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனச் சுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம்.

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது - ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம். இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனச் சுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயமாக நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன்.

வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது. அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது.

ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் சொல்பவர் சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும் எனவும்

சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனச் சுத்திகரிப்பு இதுவே எனவும் தெரிவித்தார்.


No comments