வீதி ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் கொரோனா பாதுகாப்பு கழிவுகள்.
வீதியோரத்தில், பயன்படுத்தப்பட்ட கொரோனா பாதுகாப்பு ஆடைகளும், முகக்கவசங்களும் முறையற்ற விதத்தில் வீசப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதிக்குச் செல்லும் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியிலேயே இவ்வாறு சமூக பொறுப்பற்று குறித்த பொருட்கள் வீசப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அவ் வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதுடன், குறித்த பகுதியில் கால்நடைகள் மேய்ந்து திரிவதால் முகக்கவசங்களிலுள்ள கிருமித் தொற்றுக்கள் கால்நடைகளையும் பாதிக்கலாம் எனவும் கால்நடைகள் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு குறித்த இடத்தில் முகக் கவசங்களை வீசிச் சென்றுள்ளமை சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கொரோனா பாதுகாப்பு ஆடைகளையும், முகக்கவசங்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
Post a Comment