யாழில் படையினர் மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்.
யாழ்ப்பாணம் பொன்னாலையில் வீடுகளுக்குள் புகுந்து ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தியதுடன் இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதனால் சில மணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக நள்ளிரவு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை - அதிகாலையே வந்து விசாரணை நடத்தினர் எனவும் மக்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment