மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள ஸ்ரீலங்கா கடற்படை.
கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர் மீது ஸ்ரீலங்கா கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் மைல் தூரத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதில் கலைச்செல்வன் என்பவருக்கு தலையில் இடதுபக்கம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகுடன் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்றுள்ளனர்.
காயம் அடைந்த கலைச்செல்வன் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நாகபட்டிணம் மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மீனவர்கள் மீதான ஸ்ரீலங்கா கடற்படையினரின் தாக்குதல் நாகப்பட்டினம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment