ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்த ஜனாதிபதி கோட்டபாய முயற்சி.
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், ஜனாதிபதியினை நேற்று (27) சந்தித்து இதனைத் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.கொவிட்19 தொற்றுக்கு மத்தியிலும், 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்துக்கு தங்களால் பங்களிக்க முடியும் என உறுதியளித்துள்ளனர்.
1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை வர்த்தக சங்கம், தற்போது 560 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் தழுவிய வகையில் பிராந்திய வர்த்தக சபை குழுமம் வியாபித்துள்ளது.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் மூலம் நாட்டை வேகமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, ஜனாதிபதி முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு சங்கத்தின் புதிய அதிகாரிகள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திட்டு, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீள்பிறப்பாக்க வலுசக்தி, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை, வர்த்தக சபையின் தேசிய கொள்கைகளுக்கு குழுக்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அதேநேரம், நடைமுறையில் உள்ள சில சட்ட திட்டங்களால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற தடைகளை நீக்குவதும் இலத்திரனியல் மயமாக்கல் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதன் ஊடாக ஏற்றுமதியை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment