ரிஷாட் பதியுதினை பழிவாங்க துடிக்கும் விமல் வீரவன்ச.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீயிட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் கூறவில்லை ஏன்? ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டு முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? என அமைச்சர் விமல் வீரவன்ஸ சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மலையகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்துள்ளார். அவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மரண அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பொலிஸாருக்கு தெரிந்தவுடன் ரிஷாத் பதியுதீன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்.
இது குறித்து எதிர்க்கட்சி என்ன கூறுகின்றீர்கள், ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா ? சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டு முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? வாய் திறந்து எதிர்ப்போமா? ஏன் அந்த சிறுமியை தீயிட்டு கொல்லும் நிலைக்கு கொண்டு சென்றனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு துணை நின்ற சக்திகளே இன்று உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஆரம்ப உரையும் இறுதி உரையும் நிகழ்த்துகின்றனர்.
இன்று அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை முன்மொழிந்தது மரிக்கார் எம்.பி, கபீர் ஹசீம் வழிமொழிந்தார், இறுதி உரையினை முஜிபூர் ரஹ்மான் எம்.பி நிகழ்த்துகின்றார்.
இது ஏனென சிந்தித்துப்பார்க்கின்றேன். ஈஸ்டர் தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை வெளிப்படுத்திய உதய கம்மன்பிலவிற்கு எதிராக இப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறி ஈஸ்டர் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
Post a Comment