Header Ads

test

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியீடு.

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிய 1,000 ரூபா நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த நாணயம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் முன்பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது.

கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 'இலங்கை - சீனா 65 ஆண்டுகள்' என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் 'சீன கம்யூனிஸ்ட் கட்சி' என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2,000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேநேரம், இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 'பட்டுப் பாதையின் முத்து' என்ற நூல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து நேற்று (06) கையளிக்கப்பட்டது.

இலங்கையின் சீன கலாசார மையத்தின் பணிப்பாளர் லிவென் யூவினால் (Liwen Yue) நூலின் முதல் பிரதி பிரதமருக்கு வழங்கப்பட்டது.

2014 செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் ஆகியோரின் தலைமையில் தெற்காசியாவின் முதலாவது சீன கலாசார மையம் இலங்கையில் நிறுவப்பட்டது.

அப்போது முதல் அதன் பணிப்பாளராக தொடர்ந்து சேவையாற்றி வந்த லிவென் யூ, தமது சேவைக் காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ளதாக இதன்போது பிரதமரிடம் தெரிவித்தாரென பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments