ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் - செ.கஜேந்திரன்.
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று முன்னெடுத்திருந்தது.
இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.
இந்நாட்டில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.
மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார். கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாக செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது.
பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.
செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
தென்பகுதியை தாரை வார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க முற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment