Header Ads

test

தவறுகளைத் திருத்தி முன்னோக்கி பயணிப்போம் என ஜனாதிபதி கோட்டபாய சூளுரை.

கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கிப் பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் அன்று மதரீதியிலான அடிப்படைவாத அச்சத்தில் உறைந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பு வீழ்ச்சிகண்டதனை மக்கள் அவதானித்தார்கள். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் காரணமாக எமது புலனாய்வுப்பிரிவு பலவீனமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவு சர்வதேசத்திற்கு முன்பாக கௌரவப்பட்டது.

எமது புராதன இடங்கள், தொல்பொருள் பகுதிகள் பகிரங்கமாக அழிக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு நாங்கள் முடிவுறுத்திய ஆயுதப் போராட்டம் மிகவும் பயங்கரமான தோற்றத்தில் மீண்டும்உருவாகியது. தேசிய பாதுகாப்பு குறித்து தற்போதுவரை பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றோம்.

பொறுப்புடைய பதவிகளுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களினால் வீழ்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவின் மனநிலையை மீண்டும் நாங்கள் உறுதிப்படுத்தினோம். அன்று பலவீனமடைந்த புலனாய்வுப் பிரிவை மீண்டும் மறுசீரமைத்துள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மறக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். பாதாள உலகை கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் கடத்தல், பாவனையையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். எமது கலாசாரம் உட்பட அனைத்தையும் அவமானப்படுத்தும் யுகத்தை நிறுத்தினோம்.

அனைவரினதும் அடையாளங்களைப் பாதுகாத்து, மற்றவர்களுக்கு இடையூறு அற்ற சமாதானமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அம்பாறை பொத்துவில் கடலோர விகாரை, தீகவாவி போன்ற கலாசார மத உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம்.

இன்று எமது நாட்டு மக்கள் இனியும் ஒற்றையாட்சி குறித்து அச்சமடையத் தேவையில்லை. எமது நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு எமது அரசாங்கம் எந்த வகையிலும் இடமளிக்காது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிசெய்துள்ளது” கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய தருணத்தில் செலுத்த முடியாமற் போகும் என்று எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆருடங்களை தகர்த்தெறிந்து ஸ்ரீலங்காவினால் கடன்களை சரியான நேரத்தில் செலுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடங்கொடுக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் சில விம்பங்களை பெரிதுபடுத்திய போதிலும் அரசாங்கத்தின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது பொய்யான விம்பமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


No comments