பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய ஆபத்தான வைரஸ் இலங்கையில் பரவியது எப்படி.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய ஆபத்தான திரிபு தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகைத்தந்துள்ளவர்கள் மூலமே பிரிட்டனின் திரிபு இலங்கையில் பரவியுள்ளமைக்கான சாதகத்தன்மைகள் உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பி.சி.ஆர். பரிசோதனைகளின் ஊடாக கண்டறியப்படும் அனைத்து தொற்றாளர்களின் தரவுகளையும் அரசாங்கம் அறிக்கைப்படுத்தி வருகிறது.
கொரோனா தொற்றாளர்களை விரைவாக இனங்காணும் வகையில் உரிய வேலைத் திட்டமொன்றையும் அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே நாம் தீர்மானங்களை எடுத்து செயல்பட்டு வருகிறோம்.
கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல், அவர்களுக்கான சிகிச்சையை வழங்கல், கண்டறியப்படும் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களை உரிய வகையில் கையாளல், வெளிநாட்டிலிருந்துவரும் கொரோனா தொற்றாளர்களை கையாளல் என இந்த செயற்பாடு ஒரு பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
பொது மக்களுக்கு தொற்று தொடர்பில் உண்மையான அனைத்து தகவல்களும் வழங்கப்படுகின்றன. ஏற்படும் மரணங்களின் தரவுகளும் தினமும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
கொரோனா தொற்று ஓர் உலகளாவிய பெருந்தொற்றாகும். கொரோனா தொற்று தற்போது பல்வேறு திரிபுகளாக விரிவடைந்துள்ளது. புதிதாக கண்டறியப்படும் திரிபுகள் ஏனைய நாடுகளில் பரவாதிருக்க நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய திரிபு தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகைத்தந்துள்ளவர்கள் மூலமே பிரிட்டனின் திரிபு இலங்கையில் பரவியுள்ளமைக்கான சாதகத்தன்மைகள் உள்ளன.
நாம் புதிய சுகாதார வழிகாட்டல்களை இதற்காக உருவாக்கியுள்ளோம். அதன் பிரகாரம்தான் செயற்படுகிறோம் என்றார்.
Post a Comment