சித்திரவதை இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை -சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் சென்றுள்ளபோதிலும் தமிழ் மக்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் இலங்கை எந்தளவிற்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோ, அந்தளவிற்கு சித்திரவதைகளுக்கும் பிரபல்யம் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு இன்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மிளகாய்த்தூய், பிளாஸ்டிக்பைகள், பெற்றோல், கட்டுமானக்குழாய்கள், தண்ணீர் பீப்பாய்கள், மின்சார வயர்கள், சிகரட்கள், முட்கம்பிகள், சூடான இரும்புக்கம்பிகள், கப்பிகள் மற்றும் கிரிக்கெட் விக்கெட் மட்டைகள் என்பன சித்திரவதை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சித்திரவதை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கும் அதேவேளை, போர் முடிவடைந்ததன் பின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இவர்களில் சிலர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என கூறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம், இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் அநேகமானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்களது வாக்குமூலங்களை ஆவணப்படுத்துவதில் தாமதமேற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகப் பிரசாரம் செய்தமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டமையுமே தாம் கடத்தப்பட்டமைக்கு காரணமென அவர்கள் விசாரணைகளில் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில் இலங்கை எந்தளவிற்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோ, அந்தளவிற்கு சித்திரவதைகளுக்கும் பிரபல்யம் பெற்றுள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் கூறியுள்ளது.
பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் தொடரும் சித்திரவதை, துஷ்பிரயோகங்களை முழுநாடும் ஏற்றுக்கொள்வதுடன் பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இதுவாகும் என குறிப்பிடப்படுகிறது.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டிய நேரமாகும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment