கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் - கடற்படையினர் அதிரடி.
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் வெங்காய விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 235 கிலோவிற்கும் கேரள கஞ்சா மற்றும் 522 கிலோ வெங்காய விதைகள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவை மீட்கப்பட்ட போது படகிலிருந்த 7 இந்தியர்களும் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுடன் , கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் உட்பிரவேசிக்க முயற்சிக்கும் ஏனைய நாட்டவரை தடுத்து நிறுத்துவதற்காக கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதுடன், இந்த கண்காணிப்பு நடவடிக்கையானது 24 மணிநேரமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் , குதிரைமலை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் வந்த இந்திய படகொன்றை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது படகிலிருந்து 118 பொதிகளில் அடைக்கப்பட்ட 235 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இவை சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவையாகும். குறித்த படகில் 7 இந்தியர்கள் இருந்துள்ளதுடன் , அவர்கள் அனைவரையும் கடற்படையினர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை நீர்கொழும்பு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று அவதானிக்கப்பட்டுள்ளதுடன் , அதிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 522 கிலோ கிராம் வெய்காய விதைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் படகில் பயணித்த இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment