பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சந்தேக நபர்களை மடக்கி பிடித்த பொலிஸார்.
வீதிகளில் பயணிக்கும் பெண்களின் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர், தும்மலசூரிய பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரால் உடுபத்தாவ கரவுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்து கரவுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற போதே பொலிஸார் இவர்களை கைது செய்தனர்.
இச்சந்தேக நபர்கள், கடந்த சில காலமாக பல பகுதிகளுக்குச் சென்று வீதிகளில் பயணிக்கும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிரிவுல்ல, மாராவில, வென்னப்புவ, தும்மலசூரிய, கொஸ்வத்தை போன்ற பிரதேசங்களிலும் கொள்ளைச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தும்மலசூரிய பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வீடுகளுக்குச் சென்று பெண்களிடம் குடிப்பதற்கு நீர் கேட்டுவிட்டு,அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இக்கொள்ளைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையிடப்படும் தங்க சங்கிலிகளை குறைந்த விலையில் நகைக் கடைகளில் விற்பனை செய்தல், தனியார் வங்கிகளில் அடகு வைத்தல் போன்ற வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலக்கத்தகடுகள் மாற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களையே இவர்கள் இக்கொள்ளைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பல நகைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment