வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்து நிலைமை காணப்படுகின்றது கடந்த வாரங்களில் இது குறைவடைந்த போக்கை காட்டியது இருந்த போதிலும் நேற்றைய தினத்தில் 37 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த வாரம் வரை 19 இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் 968 குடும்பங்களைச் சேர்ந்த1995 நபர்களை சுய தனிமைப் படுத்தி உள்ளோம். நேற்று மாலையில் கிடைத்த பிசிஆர் பரிசோதனையின் படி கொடிகாமம் நகரப் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதனையடுத்து கொடிகாமம் சந்தை பகுதி அதனுடன் இணைந்த கடைத்தொகுதி அத்தோடு இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் கொடிகாமம் வடக்கு கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டும் இன்று காலை தொடக்கம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்தப்பகுதியில் சுகாதாரப் பிரிவினர் தொடர்ச்சியான பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த கிராம மக்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். இருந்தபோதிலும் தற்போது தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் இடர் நிலைமை காணப்படுவதன் காரணமாக மக்களின் நன்மை கருதி சுகாதார பிரிவினரால் கொடுக்கப்பட்டிருக்கிற சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்குரிய விழிப்புணர்வு செயற்பாடுகள் கிராம மட்டத்திலும் இடம்பெற்று வருகின்றது. ஆகவே பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினரின் அறிவுரைகளை பின்பற்றி இணங்கி செயற்பட வேண்டியது அவர்களுடைய கடப்பாடாக காணப்படுகின்றது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் அநேகமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து வீடுகளிலிருந்து செயல்படும்படி நாங்கள் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
அவசியமற்ற ஒன்று கூடல்கள் பயணங்களை தவிர்த்து நிகழ்வுகளை தவிர்த்து வீடுகளிலிருந்து செயற்படுதல் மிகவும் சிறந்ததாகும் அது ஒரு பாதுகாப்பாகவும் காணப்படும். இந்தச் சந்தர்ப்பத்திலே தமிழ்நாட்டில் தொற்று நிலைமை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கடல் கடந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்குரிய நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 11 படகுகள் கைப்பற்றப்பட்டதாக அறிய முடிகின்றது. மேலும் இந்த நடவடிக்கை குறித்து ஆழ்கடல் மீனவர்களுக்கும் அதேபோல மீன்பிடி சமூகத்தினருக்கும் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு கண்காணிப்பு செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம். கடலில் ரோந்து நடவடிக்கைகளும் கடற்படையினரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து நமது மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
Post a Comment