சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகளின் கவனம் பின்னர் செவ்வாய் கிரகத்தின் பக்கம் திரும்பியது.
குறிப்பாக அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன. சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.
இந்த நிலையில் தற்போது செவ்வாய்கிரகத்தில் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
Post a Comment