யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவி தூபி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட நிலைமையைச் சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்கமாட்டோம்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல.
வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம் என கமால் குணரட்ண தெரிவித்திருந்தார்.
யாழ். பல்கலைக் கழகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி கடந்த ஜன-08ஆம் திகதி இரவோடு இரவாக, மேல் நிலையில் உள்ளவர்கள் வழங்கிய நெருக்கடிகளின் காரணமாக பல்கலைக் கழக நிர்வாகத்தினால் இடித்தழிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்கலைக் கழக மாணவர் மேற்கொண்டிருந்த தொடர் உண்ணாவிரதம் மற்றும் அரசியல் ரீதியாக ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக மீளவும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் மாணவர் ஒன்றியத்தினரால் மீளவும் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 23ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment