சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாவற்குழியில் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான சமரச முயற்சிக்கு சென்ற சாவக்சேரி பிரதேச சபை உறுப்பினரான இராமநாதன் யோகேஸ்வரன் என்ற உறுப்பினர் மீதே சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கத்தியால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த அவர் மீது கற்களாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு திருட்டுச் சம்பவங்களை உடனடியாக முறிடியத்த நடவடிக்கைக்கு தாக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தலைமை தாங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
நேற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் துணையுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக அவருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தை அடுத்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக தனியாக அவர் அங்கு சென்றிருக்கின்றார். சென்ற பின்னரேயே திட்டமிட்டு அவர் வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பின்னர் அவரின் தலையில் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தப்பட்டிருக்கின்றார். அதன் பின்னர் அங்கு நின்றிருந்த சிலர் கற்களால் அவரின் தலையில் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்திருக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment