புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பேர் கைது.
திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை – கண்டி வீதி ஐந்தாம் கட்டை பகுதியில் வசித்து வரும் உபுல் புஸ்பகுமார தெல்கொட ( 52 வயது) மற்றும் ஹேமந்த விஜயசிங்க (44 வயது), அனுராதபுரம்-றுக்கஹவில பகுதியில் வசித்து வரும் ராஜபக்ச முதியன்சலாகே பந்துல ராஜபக்ச (62 வயது), அனுராதபுரம்-தாவந்திபுர பகுதியைச் சேர்ந்த சமரக்கோன் முதலாகே ஜகத் சந்தன சமரக்கோன் (50 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை வெல்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக விசேட காவல்துறை அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த, விசேட காவல்துறை அதிரடி படையினர் அலவாங்கு-மண்வெட்டி போன்றவற்றுடன் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
Post a Comment