அகிம்சைக்கும் அனுமதியில்லை!
P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்று வருகின்றனர்.
இன்று காலை p2p மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கி அகிம்சை வழியிலா சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொத்துவில் பொலீசார் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்டப்பட இருந்த பதகைகளை கைப்பற்றியதுடன் பதாகைகளையும், போராட்டகாரர்களை ஏற்றிச் சென்றதாக கூறி பொத்துவில் பொலீசார் வாகனம் ஒன்றைக் கைப்பற்றி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.
இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில்
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் ஆரம்பித்து வைத்தார்.
இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது ஆலய முன்றிலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கிவருகின்றனர்.
மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்த போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
Post a Comment