அவசரமாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சம்மந்தன்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தமைக்கு, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிடமிருந்து இதுவரை எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டேரஸ், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட் ஆகியோருக்கும், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்புக்கான தங்களது, கடந்த டிசம்பர் 28 ஆம் திகதிய ஆலோசனைகள், கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் பெப்ரவரி 24ஆம் திகதியிடப்பட்ட தங்களது கடிதம் ஆகியன தொடர்பாக தாம் இதனை எழுதுவதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கான புதியதோர் அரசியலமைப்பில், தீர்த்துவைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம், தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் என்றபோதிலும், ஜனாதிபதி, நிபுணர் குழுவை நியமித்தபோது தங்களோடு கலந்தாலோசிக்கவில்லையென்பது கவனிக்கத் தக்கதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நிபுணர்குழு, பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியபோது, தாம் அந்த நடைமுறையில் மிக ஆக்கபூர்வமாக ஈடுபட்டு தமது ஆலோசனைகளை அனுப்பிவைத்தாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில் சந்தித்து, தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், கடந்த 33 ஆண்டுகளில் எட்டப்பட்ட கருத்தொருமைப்பாட்டு விடயங்களை இனங்காண்பதில் குழுவோடு இணைந்து செயற்படுவதற்கான தமது விருப்பம் தொடர்பாகவும் மேலும் விரிவாக எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் நிபுணர் குழுவுக்கு அறிவிக்கப்பட்டவாறு, ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றைக் காண்பதற்கு தாம் விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச்செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்கவேணடும்.
இது, இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதோர் அரசியலமைப்பை வகுக்கும் உன்னதப்பணியில், நிபுணர் குழுவுடன் ஒத்துழைப்பதற்கான தமது விருப்பை வெளிப்படுத்தலின் ஒருநினைவூட்டலாகும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Post a Comment