Header Ads

test

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அப்பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் சடலத்தை அவதானித்த நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை அவதானித்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டனர். எனினும் சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சிதைவடைந்து உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன் கிழமை காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலத்திற்கு அருகில் பாதணியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments