கணவனின் பொறியில் சிக்கிய மனைவி உயிரிழப்பு.
ஹாலிஎல – லந்தேவல பிரதேசத்தில் பயிர்களை பாதுகாப்பதற்காக கணவனால் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரவில் செயற்படுத்திய மின்வேலிக்கான மின் இணைப்பை கணவன் துண்டிக்க மறந்துள்ளார்.இந்நிலையில், காலை வேளையில் தோட்டத்துக்கு சென்ற அந்நபரின் மனைவி(56) மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து சுமார் 100 அடி தூரத்திலுள்ள தோட்டத்தின் பயிர்களை இரவு நேரத்தில் பாதுகாப்பதற்காக குறித்த நபர் சிறிய கம்பியின் மூலம் மின்வேலி அமைத்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மின்வேலிக்கான மின் இணைப்பை தினமும் காலையில் மேற்படி நபர் துண்டித்து விடுவதாகவும், இன்றுகாலை தான் நித்திரையில் ஆழ்ந்ததால் அவரால் மின்சாரத்தை துண்டிக்க முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காலை வேளையில் எழுந்த மனைவி, உணவு தயாரிப்பதற்காக காய்கறிகளை பறித்துவரும் நோக்கில் தோட்டத்துக்கு சென்றிருந்த வேளையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தாய் வீடு திரும்ப தாமதமானதால் அவரைத் தேடிச் சென்ற மகள், தனது தாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து, அப்பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான 59 வயதான கணவரை ஹாலிஎல காவல்நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.
Post a Comment