Header Ads

test

பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 பச்சைமலை(மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும்.


பச்சைமலை (மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.


பச்சைமலை - பெயர்க்காரணம்


நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.


வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.

திருக்கோவில் வரலாறு

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.


காலங்கள் கடந்தோட, மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. பூஜை மற்றும் திருப்பணி இல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.

மூலவர்

பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு  நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம்.


ஸ்ரீ ஷண்முகர்

பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர்  உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.


பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.


பூஜை விபரம் / திறந்திருக்கும் நேரம்

பச்சைமலை கோவிலில் எழு கால பூஜைகள் செய்யப்படுகிறது. காலை பதினொரு மணியளவில் ஒரு அபிஷேகமும், மாலை ஆறு மணியளவில் ஒரு அபிஷேகமும் தினமும் செய்யப்படுகிறது. மாலை ஆறு முப்பது மணியளவில் தங்க மயில் புறப்பாடு நடைபெறுகிறது. தங்க மயில் மீது பவனி செல்லும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பிறகு தங்கத்தேரில் எழுந்தருளுவார்.


இறுதியாக மாலை எழு மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை என்கிற இராக்கால பூஜை, பழனியை போன்றே மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இறைவனாகிய பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யபடும். அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறை உள்ளடக்கிய பஞ்சபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை,கந்தர் அநுபூதி,கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளை தமிழ் ஆகிய நூல்களில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பாடப்படும்.


அப்பொழுது சிவசாரியார்களுடன் சேர்ந்து பக்தர்களும் பாட அனுமதிக்கப்படுவார்கள். இறுதியாக கல்யாண சுப்ரமணியர் மற்றும் பைரவர் தீபாராதனை முடிந்து கோவில் சாத்தப்படுகிறது. கல்யாண சுப்பிரமணியர் முன் இந்த இறுதி தீபராதனையில் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிறகு பிரசாதமாக திணை மாவு மற்றும் ஞானப்பால் வழங்கபடுகிறது.


இக்கோவில் காலை 5:30 AM மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1:00 PM மணிக்கு நடைசாற்றப்படும். அதே போல் மாலை 4:00 PM மணி முதல் இரவு 8:30 PM மணி வரை கோவில் திறந்திருக்கும்.


போக்குவரத்து வசதி

பச்சைமலை கோவில் கோபிசெட்டிபாளையம்  நகராட்சியில் அமைந்துள்ளது. கோபி பேருந்து நிலையத்தில் இருந்து 1 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உள்ளதால், கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். கோவிலுக்கு மேலே செல்ல மலை பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் 40 Km தொலைவிலும், கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 80 Km தொலைவிலும் அமைந்துள்ளது.



No comments