இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ் கால்வாயின் ஊடான எவர்கிவன் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்.
எகிப்தின் சுயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் கடந்த 23 ஆம் திகதி தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக சுயஸ் கால்வாய் நிர்வாகத்தினரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பலை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை 4:30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் நீரில் வெற்றிகரமாக மிதக்கவிடப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இக்கப்பல் கால்வாய்க்கிடையில் சிக்கியிருந்தமையினால் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், சுமார் 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் கால்வாயின் இருமருங்குகளிலும் நங்கூரமிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், மீட்புக்குழுவினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 அவசர மீட்பு படகுகள் மற்றும் 8 மணல் அகற்றும் இயந்திரங்களைக் கொண்டு இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே எவர் கிவன் கப்பல் தரை தட்டியது.
சுமார் 2,20,000 டன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment