வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தை மாணவர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டனர்.
வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரியே மாணவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பாடசாலை தவணை விடுமுறையை அடுத்து அவர்கள் பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த பாடசாலை மாணவர்கள் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தங்களது கல்விச்செயற்பாடுகள் பின்தங்கியுள்ளதாக மாணவர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.
எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு கோரியதுடன், அவர்கள் பிரதேச செயலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அங்கு காவற்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதேச செயலாளர் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மற்றும் மாணவர்கள் சிலரிடம் கலந்துரையாடியதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
Post a Comment