வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது .
வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
குறித்த நபரின் தனியார் வங்கிக் கணக்கொன்றுக்கு, வெளிநாட்டிலிருந்து ஒருகோடியே 34 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தொகையொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, முறையற்ற விதத்தில் இலங்கைக்கு பணம் அனுப்புகின்றமை குறித்து, பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 14 கோடி ரூபாய் பணம், இவ்வாறு முறையற்ற விதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், ஏற்கனவே சுமார் 30 சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நபர்களே, இவ்வாறான நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதன்படி, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
Post a Comment