கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.
சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கொவிட் - 19 நிலைமையை கருத்தில் கொண்டும் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவி வரும் நெருக்கடிகளைக் குறைக்கும் நோக்கிலும் சிறைக் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விசேட பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்கவை தலைவராகக் கொண்ட குழுவினரால் ஆராயப்பட்டு வகுக்கப்பட்ட கொள்கைத்திட்ட அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது கொள்கைத் திட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பில் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்தின் பின் 8000 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment