டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவிப்பு.
டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனையினை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலைப்பகுதி இதுவரை கண்டுபிடிக்காமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சடலம் மற்றும் அவரது தாய் என கருதப்படும் பெண்ணிடம் இருந்தும் மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகள் ஒத்திசையுமானால் சடலம் குறித்த பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அந்த பயணப்பொதியினை விட்டுச்செல்லும் நபர் தொடர்பில் சீ.சி.ரீ.வி காணொளியின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண், குருவிட்ட - தெப்பனாவை பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என கண்டறியப்பட்டது.
குறித்த பெண்ணும், அவரை கொலை செய்து பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் கைவிட்டு சென்றவரும் கடந்த 28 ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதிவாகியிருந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும், சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறும் காணொளியும் கிடைக்கப்பெற்றன.
இந்தநிலையில், மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர், புத்தல காவல்நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப காவல்துறை பரிசோதகர் என தெரியவந்தது.
அவரை கைது செய்வதற்கு மொனராகலை காவல்துறையினர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த காவல்துறை பரிசோதகர் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment