நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் தொடர்பில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்.
தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து, கடந்த வியாழன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் படுகொலைச் செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் லிந்துலை திஸ்பனை தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சித்திரவள்ளி (வயது 28) என்ற இரு பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண் ஐந்துமாத கர்ப்பிணி இருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
டயகம டொரிங்கடனிலுள்ள தனது கணவரின் வீட்டில் வசித்து வந்த அவர், கடந்த 23ஆம் திகதி மாலை மூன்று மணியளவில், கணவரின் வீட்டிலிருந்து மன்றாசி வைத்தியசாலைக்குச் சென்று வருவதாகக் கூறி ட்டிலிருந்து சென்றதாக , பெண்ணின் கணவர் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்று தினங்களின் பின்னர், சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்படும்போது, இரவு நேர ஆடை (நைட்டி) அணிந்திருந்ததால், அந்த ஆடையுடன் அவர் வைத்தியசாலைக்குச் சென்றிருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இப்பெண் படுகொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என பெண்ணின் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பில், தலவாக்கலை பொலிஸில், முறைப்பாடு செய்திருந்தனர்.
இந் நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் வரை குறித்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க முடியாதென பிரேத பரிசோதணை சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது சடலம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று காலையே பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவரிடம் நீண்ட விசாரணைகள் கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், பெண்ணின் பெற்றோர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, விசாரணைகளின் அறிக்கைகள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பெண்ணின் கணவரை அக்கரப்பத்தனை பொலிஸார், பொலிஸ் நிலைய காவலில் வைப்பதற்கு நடவக்கை எடுத்தபோது, சிறுநீர் கழித்துவிட்டுவருவதாகக் கூறிவிட்டு வெளியில் வந்த அவர், அங்கிருந்து தப்பிசென்றுள்ளார்.
அவரது சகோதரியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment