புத்தளத்தில் பதற்றம் - புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல்.
புத்தளத்தில் பதற்றம்- சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த புலனாய்வுப் பிரிவு.
புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் நேற்று இரவு 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனால் கண்ணாடி உடைகின்ற சத்தத்தை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர். அதனையடுத்து பொலிஸாருக்கும் உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் குறித்த பகுதிக்கு உடனடியாக சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞன் கற்பிட்டி பாலக்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர் போதையில் இருந்ததாக பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம், கற்பிட்டி, நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment