சகல வரம் அருளும் அகரம் முத்தாலம்மன் கோவில்
அகரம் முத்தாலம்மன் கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பேரரசின் கடைசிக்காலத்தில் வரித்தண்டலராக பணிபுரிந்தவர் சக்கரராயர் என்ற அந்தணர். இவர் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஆவார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக அங்கிருந்து தன் குலதெய்வமான முத்தியாலு அம்மனின் உத்தரவின்படி முத்தியாலு அம்மனுடன் தென்திசை நோக்கி தன் படைபரிவாரங்களுடன் கிளம்பினார்.
தாடிக்கொம்பு அருகே செல்லும் குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அகரத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது முத்தியாலு அம்மன் குறிப்பால் உணர்த்திய இடத்தில் தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனுக்கு கோவில் கட்டினார். இதனைத்தொடர்ந்து இக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் விழாக்கள் பாரம்பரிய முறைகளின்படி நடத்தி வந்தார். இம்முத்தியாலு அம்மன் காலப்போக்கில் பெயர் மறுவி, தற்போது முத்தாலம்மன் என அழைக்கப்பட்டு வழிப்பட்டு வருகின்றனர்.
இந்த கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 2005-ம் ஆண்டிற்கு முன்னர் சுதையால் செய்யப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவினை கேட்டு கற்சிற்பங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என பிரகாரங்கள் அமைந்துள்ளன.
மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமாமுனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டாரப்பெட்டியும் உள்ளது. அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமாமுனிவருக்கும், பண்டாரப்பெட்டிக்கும் செய்யப்படுகிறது. இக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஐந்து முகங்களைக்கொண்டு எழுந்தருளியுள்ள சுரலிங்கேஸ்வரருக்கு தனி சன்னதி, ஞானம் தரும் விநாயகர், விசாலாட்சி அம்மன், வடமேற்கு மூலையில் பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, வடகிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை கணக்கிட்டு நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன்பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அம்மனின் சன்னதியில் அம்மனின் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். இதற்காக தாடிக்கொம்பு மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சன்னதியில் கூடுவர்.
குண்டுசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் வண்ணம் நிசப்தத்துடன் அம்மனை மனமுருக வேண்டியபடி அமர்ந்து இருப்பர். கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடக்குப்பகுதியில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்குப்பிரகாரத்தில் உள்ள திருவாச்சி பக்கமோ பல்லி சப்தம் தருவதை அம்மனின் உத்தரவாக கொண்டு திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனின் உத்தரவு கேட்கும்போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூதராஜாவின் பக்கம் பல்லி சப்தம் செய்து சகுனம் அளித்தால் திருவிழா நடத்தப்படுவதில்லை. மேலும் எந்த பகுதியிலும் பல்லி சப்தம் கொடுக்கவில்லை என்றாலும் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை எனக்கருதி திருவிழா நடைபெறுவதில்லை.
அம்மனின் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா பாரம்பரிய அடிப்படையில் சாட்டுதல் நடைபெறும். மறுநாள் முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்களும் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டாரப்பெட்டி சன்னதியிலிருந்து கிளம்பி கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அதனைத்தொடர்ந்து புராண நாடகங்களும் நடைபெறும். உற்சவ காலத்தில் எழுந்தருளும் அம்மன் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை மூட்டை, களிமண் உள்ளிட்ட பல பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம்நாள் வெள்ளிக்கிழமை உருவாக்கப்படுகிறது. பிறப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட அம்மன் கண்திறப்பு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பபடுவார்.
அங்கு அம்மனின் கண்திறப்பு விழா அரசு உயர் அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காலை 10 மணிக்கு நடைபெற்று உடனடியாக ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருள்வார். கண்திறக்கப்பட்ட உற்சவகால அம்மன் சன்னதிக்கு செல்லாமல் கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வது வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.
அன்று பகல் முழுவதும் சகல வரம் தரும் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றோர் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தைகளை தூக்கிவந்தும் நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் அம்மனின் அருளால் தங்களது விவசாயத்தில் கிடைத்த கம்பு, சோளம், நெல், மக்காசோளம், வாழைப்பழம் உள்ளிட் விவசாய பொருட்களை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு மண்பொம்மைகளை காணிக்கையாக அளித்தும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
அன்று நள்ளிரவு அம்மன் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருள்வார். மறுநாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன், பின்னர் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் மத்தியில் உலா வந்து பூஞ்சோலையில் எழுந்தருள்வார்.
குறிப்பாக அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை தின்று, பூஜிக்கப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இத்திருக்கோவிலின் காவல் தெய்வமான பூதராஜாவை வழிபடுவதன் மூலம் தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும்.
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் அகரம் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது.
Post a Comment