மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை.
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய விவசாயி ஒருவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விவசாயியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பில் பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த சிறுமியின் தந்தைக்கு 2 பிரிவுகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார். அதன்படி, அவர் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.
Post a Comment