Header Ads

test

யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள 60 பாடசாலைகளில் 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.

 யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள 60 பாடசாலைகளில் 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சாவகச்சோி நகரசபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாக குறைவடைந்துள்ளதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு ஒரு மாணவர் கூட இணையவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட அவர், தற்சமயம் இருநூறு பிள்ளைகளுக்கும் குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக இலங்கை கல்வி அமைச்சு தெரிவித்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள அறுபது பாடசாலைகளில் 54 பாடசாலைகளே தற்சமயம் இயங்கி வருகின்றன. ஆறு பாடசாலைகள் சில பல காரணங்களால் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. பொறுப்பு வாய்ந்த கல்வி அதிகாரி ஒருவரின் தகவலின் படி தென்மராட்சியில் முப்பது பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி பயில்கிறார்கள்.

கல்வி அமைச்சின் யோசனை நடைமுறைக்கு வருமானால் தென்மராட்சி பிரதேசத்தில் மாத்திரம் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.

ஒரு பாடசாலையை தீர்மானம் நிறைவேற்றி மூடுவது சுலபம். ஆனால் அதே பாடசாலையை ஆரம்பிப்பது மிகமிகக் கடினமான செயற்பாடு.

அத்துடன் தென்மராட்சியில் குறைந்த மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சிலவற்றை அருகில் இருக்கும் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், அதனை நாம் தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments