Header Ads

test

யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை-சிவசக்தி ஆனந்தன்.!!!

யாருக்கு வாக்களிப்பது?
ஒருமித்த முடிவே இன்றைய தேவை-சிவசக்தி ஆனந்தன்.!!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது.

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிதன் அவசியம் பற்றி வடக்கில் தீவிரமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த முயற்சிகள் எந்தளவில் உள்ளன?

முதலாவதாக இந்த நிலை தோன்றியதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்கு இருந்த ஒரே தெரிவு பாராளுமன்ற ஜனநாயக அரசியல்தான். அதனால்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தனர். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்றதால்தான் கூட்டமைப்பின் வெற்றி சாத்தியமாயிற்று.

மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டு கூட்டமைப்பின் பெயரால் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது கட்சியை வளர்த்துக் கொள்வதிலும் அங்கத்துவக் கட்சிகளை ஒதுக்கிவைப்பதிலுமே தனது கவனத்தைச் செலுத்தியது. அதே நேரம் மக்கள் நலனில் அக்கறையின்றியும் செயற்பட்டு வருகின்றது. இவை மக்களை முகம் சுழிக்கச் செய்துள்ளன. எனவே மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டிலிருந்தே இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களிலிருந்து விலகிச் செல்லும் முடிவை எடுத்து விட்டது. அப்பொழுதிலிருந்தே தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து அவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளாக அறிவிக்கத் தொடங்கிவிட்டது. இவற்றிற்கெதிராக நாம் குரல் கொடுத்த பொழுதிலும் அவை கணக்கிலெடுக்கப்படவில்லை.

கடந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்த வேளையில், இது சரியான தருணம். எனவே எமது கோரிக்கைகளை நிபந்தனைகளாக வைத்து சில உத்தரவாதங்களைப் பெற்று நாம் எமது ஆதரவினை வழங்குவோம் என்று கூறியதற்கு கௌரவ சம்பந்தன் ஐயா அவர்கள் நாம் நிபந்தனைகளை வைத்தால் சிங்கள மக்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்னை நம்புங்கள் என்று எமது வாயை அடைத்தார்.

அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் சம்பந்தனைப் பார்த்து 2015 ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக நாங்களும் நீங்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று கேட்டதற்கு நான் உங்களை நம்புகிறேன் என்று பதிலளித்தற்கு பிற்பாடு இன்னமும் நீங்கள் சிங்களத் தலைவர்களை நம்புகிறீர்களா என்று சந்திரிக்கா கேட்டதாக அவரே தெரிவித்திருந்தார்.

இப்படி அரிய வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டு இன்று எம்மை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு நாட்டில் உள்ள தலைவர்களுக்கு முதுகெலும்பில்லை,பிரதமர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி கோத்தபாயவை ஆதரிக்க முடியாது ஆகவே, சஜித்தை ஆதரிக்கலாம் என்ற பிரச்சாரத்தை கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகவே மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்கும் ஒரு படி மேலே சென்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை தேவமைந்தனாகவும் நாட்டின் ரட்சகராகவும் பார்க்கும் நிலையும் தோன்றியுள்ளது. இப்படிப் பேசுபவர்கள் எவரும் எமது தேசிய இன விடுதலைக்கான போராட்டத்தில் எத்தகைய நேரடிப் பங்களிப்பையும் செய்யாதவர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தவருக்கு ஆதரவளித்து அவரைப் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து நாமே காப்பாற்றிவிடப்போகிறோமா அல்லது யுத்தக்குற்றாச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவரையும் சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்றிவிட்டோம். எம்மால்தான் இந்த நாட்டுக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து ஏற்பட்ட அபகீர்த்தி களையப்பட்டது. நாம்தான் அனைத்து படைவீரர்களையும் காப்பாற்றினோம் என்றும் இலங்கையை ஒரு பௌத்த கேந்திர மையமாக மாற்றுவேன் என்று சொல்பவரை ஆதரிக்கப்போகிறோமா என்ற ஒரு இக்கட்டான கேள்வி இன்று ஒவ்வொரு தமிழ் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளது. 2015-2017-2019 ஆண்டுகாலப்பகுதியில் ஜநா மனிதஉரிமை பேரவைக்கான காலக்கெடு அனைத்து வரவுசெலவுத்திட்டம் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்ல தீர்மானம் உட்பட அனைத்திலும் இலங்கை அரசை காப்பாற்றி தமிழ் மக்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதன் செயற்பாடுகளைத் தட்டிக்கேட்காத அங்கத்துவக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான நிலையில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்த முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிலைமையின் அபாயம் அனைத்துத் தமிழ்த் தரப்பினராலும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் முன்னமேயே ஆரம்பித்திருக்கப்படவேண்டும். நாம் இன்னமும் ஜனநாயக அரசியல்முறைக்குப் பழக்கப்படாமையால் எல்லாம் மந்தகதியில் நடைபெறுகிறது. இருப்பினும் இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம்.

தனித்தனியாகவோ அல்லது தனித்தனி கட்சியாகவோ ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே அனைவரும் கூடி முடிவெடுத்து, அந்த முடிவை ஒருகுழுவாகச் சென்று ஜனாதிபதி வேட்பாளர்களிற்க்கும் இராஜதந்திரிகளுக்கும் தெரிவித்து, அவர்களின் கருத்தை அறிந்து, பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் முடிவெடுப்பதே சாலச்சிறந்தது அந்தவகையிலே தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் ஆறு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக முடிவெடுப்பது என தீர்மானித்துள்ளோம்.

இன்றைய நிலைக்கு முழுமுதற் காரணமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுமே என்பதை அந்தக் கட்சியினர் ஏற்றுக்கொண்டு இந்தத் தேர்தல் அந்தக் கட்சி விட்ட தவறைத் திருத்திக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களும் தாம் தனியே சென்று வேட்பாளர்களைச் சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து கைகோர்த்துச் செயற்பட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.மற்றபடி ஏனைய தமிழ் கட்சிகளும் பொது அமைப்புக்களும் மதத்தலைவர்களும் புத்திஜீவிகளும் பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் மக்கள் ஆகியோர் ஓரணியிலேயே இருக்கின்றன. மக்களும் பெருமளவில் இந்தப் பக்கத்திலேயே இருக்கின்றனர் என தெரிவித்தார்.

No comments