Header Ads

test

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் உட்பட 9 கோரிக்கைகளை சஜித்திடம் முன்வைத்த தமிழ் முற்போக்கு கூட்டணி.!!!

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் உட்பட 9 கோரிக்கைகளை சஜித்திடம் முன்வைத்த தமிழ் முற்போக்கு கூட்டணி.!!! 

தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும்,  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பிலுள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் வதிவிடத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இச் சந்திப்பில்
மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம், கைத்தொழில் பேட்டை,  அரச தொழில் வாய்ப்புகள்  உட்பட 9 பிரதான தலைப்புகளின் கீழ் முக்கியமான பல  கோரிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-

மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினால்   தயாரிக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையும் சஜித்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம்  அமைய வேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டம் தொடர வேண்டும் என்பதுடன், ஆசிரியர்கள், வேலையில்லாதவர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரும் வீடமைப்பு திட்டத்துக்குள் உள்வாங்கப்படவேண்டும்.

தோட்டப்புறங்களை அண்மித்துள்ள நகரங்களில் வாழும் மலையக மக்களுக்கும் வீடுகளை அமைப்பதற்கு நிலவுரிமையையும், கடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

கைத்தொழில் பேட்டைகள், ‘NAITA’ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் நிர்மாணிக்கப்படுதல் அவசியம்.

ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்லாமல் அனைத்து அரச துறைகளுக்கும் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுடன், வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம்.

தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற்றாலும் உள்ளாட்சி மன்றம், மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறான விடயங்கள்  உட்பட 9 தலைப்புகளின்கீழ் முக்கிய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மலையக மக்களுக்காக எனது தந்தையால் ஆற்றப்பட்ட சேவைகளை விடவும் பல சேவைகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments