Header Ads

test

தமிழர்களின் கலாசார சின்னங்களின் மீது பௌத்தத்தை நிறுவுவதுதான் நல்லிணக்கமா? ஈபி.ஆர்.எல்.எவ் கேள்வி.!!!

தமிழர்களின் கலாசார சின்னங்களின் மீது பௌத்தத்தை நிறுவுவதுதான்
நல்லிணக்கமா?  ஈபி.ஆர்.எல்.எவ் கேள்வி.!!!

தமிழ் மக்களினதும் சைவத் தலைவர்களினதும் எதிர்ப்புக்களையும் மீறி
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணி அருகில் கொலம்பே
மேதாலங்கார தேரரது உடலம் தகனம் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு
முற்றவெளியில் நாகவிகாரையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவரது உடலமும் தகனம்
செய்யப்பட்டது. இச்சம்பவங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை
ஏற்படுத்தியுள்ளது எனவும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளின் கடும்போக்கு கண்டிக்கத் தக்கது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் சிங்கள தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக
அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரித்தானியர்களின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு முன்னரே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்த
பின்னர், இந்நாட்டின் விடுதலைக்கு முன்னின்று உழைத்த தமிழ் பேசும்
சமூகத்தினரை அவமதித்து, அவர்களை அடக்கி ஒடுக்கி, ஒன்றில் அவர்களை தம்முள்
கரைந்து போகச் செய்வது, அல்லது அவர்களை இல்லாதொழிப்பது என்ற கடும்போக்கை
இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் தொடர்ந்தும் கடைப்பிடித்து
வந்துள்ளனர்.

சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு எதிரான குரலை பயங்கரவாதமாகச்
சித்திரித்து சர்வதேச ஆதரவுடன் இன்று தமிழ்த் தேசிய இனத்தின்
சுயமரியாதைக்கான குரல்கள் அனைத்தும் மௌனிக்கச்
செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து தமது
அடையாளங்களுடன் வாழ்வதற்கும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி
வேண்டியும் தொடர்ந்தும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளைக் காப்பதற்குக்கூட சர்வதேச
மட்டத்தில் அமைப்புக்கள் உள்ளன.ஆனால் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்
சர்வதேச சட்ட மற்றும் நியமங்களுக்கு அமைய தலை நிமிர்ந்து வாழ்வதை
உத்தரவாதப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய சர்வதேச
அமைப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.

தமிழர் தாயகத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ்த் தேசிய இனத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களும் அதற்குப் பின்னரான தமிழர்
பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும், தமிழர்களின் கலாசார வழிபாட்டிடங்களில் திட்டமிட்ட பௌத்த திணிப்புகளும் இந்த நாட்டில் தமிழர்கள் என்ற ஒரு தேசிய இனம்
இருந்ததற்கான அடையாளமே இருக்கக்கூடாது என்ற நினைப்பில் சிங்கள பௌத்த
மேலாதிக்கவாதம் செயற்படுகின்றதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சிங்கள
பௌத்த மேலாதிக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின்மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டம் 2009 மே மாதம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் வன்மம் அதிகரித்திருக்கிறது.

இலங்கையில் தனித்தனியாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஆட்சியின்போதும் சரி, 2015ஆம்
ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்
சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் கூட்டாட்சியிலும் சரி தமிழ்த்
தேசிய இனம் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டே வந்துள்ளது. தமிழ் தேசிய இனத்தின்
ஆதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெப்பொழுதும்
இல்லாத அளவிற்கு தமிழ் பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்படும் நிகழ்ச்சி நிரல்
மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில், அவர்களின் வழிபாட்டிடங்களில், வலிந்து பௌத்த
விகாரைகளை நிறுவுவதும், இறந்த பௌத்த துறவிகளின் உடல்களை தமிழ் மக்களின்
ஆலய வளாகத்தில் எரியூட்டுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இவற்றிற்கெதிரான நீதிமன்ற உத்தரவுகளும்கூட பௌத்த பிக்குகளினால்
மதிக்கப்படுவதில்லை. இந்நாட்டின் சட்டங்களும் நீதித்துறையும் தங்களைக்
கட்டுப்படுத்தாது என்ற மனோநிலையில் பௌத்தமதத் தலைவர்கள் நடந்துகொள்வதும்
அவர்களின் மனோநிலை சரியானதே என்பதுபோல் ஆட்சியாளர்கள் நடந்துகொள்வதும்
தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பைக்
கேள்விக்குள்ளாக்கியுள்ளது.அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் நீராவியடிப்
பிள்ளையார் கோயில் ஆலய பிரதேசத்தில் பௌத்த பிக்குவின் பூத உடல் தகனம்
செய்யப்பட்ட முறை எமது
அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அத்துமீறி உட்புகுந்து ஆலயப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக புத்தர் சிலையை
நிறுவி,பௌத்தவிகாரை அமைக்கும் பணியில் கொலம்பே மேதாலங்கார தேரர்
ஈடுபட்டிருந்தார். இந்த தேரரின் அடாவடித்தனத்திற்கு எதிராக
நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு அவரது நிர்மாணப்
பணிகளுக்கு தடையுத்தரவும் பெறப்பட்டிருந்தது. இருப்பினும் மேற்படி தேரர் நீதிமன்றத்தின் உத்தரவைப் புறந்தள்ளி விகாரையை நிர்மாணித்தார்.இவர் சில
தினங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக கொழும்பில் இயற்கை எய்தினார்.

கொழும்பில் மரணித்த கொலம்பே மேதாலங்கார தேரரை முல்லைத்தீவில்
நீராவியடிபிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய முடிவெடுத்து
பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடேஅத்த ஞானசார தேரர் தலைமையில் மரணித்த தேரரின் பூத உடலுடன் முல்லைத்தீவிற்கு வந்தனர். இவர்களுக்குப்
பாதுகாப்பாக முப்படையினரும்,பொலிசாரும் களத்தில் நின்றனர். கிராம மக்கள்
ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததுடன், குறிப்பிட்ட இடத்தில் எத்தகைய
நிர்மாணப் பணிகளும் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் விதித்த தடையுத்தரவையும்
காட்டுகின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் மேற்கொள்ளவிருக்கும் தகனக் கிரியைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல்
செய்கின்றனர்.நீதிமன்றம் தகனக்கிரியைகளை குறித்த பகுதியில் மேற்கொள்ள வேண்டாம் என்று இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்ததுடன்,
திங்கட்கிழமையன்று தகனம் செய்வதற்கான இடத்தையும் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியது.இந்தத்
தீர்ப்புக்களைக் கவனத்தில் கொள்ளாது, தமிழ் சட்டத்தரணிகளைத் தாக்கி,தமிழ்
மக்களின் மனங்களைப் புண்படுத்தி, அவர்களது மத உணர்வுகளை மலினப்படுத்தி,அவர்களது இறை நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி,நீதிமன்றத்தை அவமதித்து தேரரின் தகனக்கிரியை தாங்கள் தீர்மானித்த இடத்தில் நடத்தி
முடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்தொன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டிருந்த ஞானசாரதேரர் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு
அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தை அவமதித்து சக தேரரின் தகனக்கிரியையை நடத்தியுள்ளார்.ஐக்கிய
தேசியக் கட்சியைச் சேர்ந்த இன்றைய நீதி அமைச்சர் கௌரவ தலதாஅத்துக்கொரல
தேரர்கள் சாதாரண நீதிமன்றத்தின் வாசலை மிதிப்பதையிட்டு தான்
மிகவும் கவலையடைவதாகத் தெரிவித்திருந்தார். அதாவது தேரர்கள்
நீதிமன்றத்தின் வாசலை மிதிப்பதையே ஏற்கமுடியாதவராக இருந்தார்.

நாட்டின் பிரதமர் தேரரின் செயலால் வெட்கித் தலைகுனிவதாகத்
தெரிவிக்கின்றார். அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிடுவதுபோல்
நடிக்கின்றனர்.இந்த நாட்டின் நீதிமன்றத்தையும் தனது துறையையும் அவமதித்த
பிக்குவைத் தண்டிக்க விரும்பாத நீதியமைச்சர், சம்பவத்திற்கு வெட்கித்
தலைகுனியும் அந்த அமைச்சருக்குத் தலைமைதாங்கும் பிரதமர் ஆகியோரின் செயற்பாட்டை உற்றுநோக்குகையில் இந்த நாட்டில் எத்தகைய நிர்வாகம் நடக்கிறது? யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

இப்படிப்பட்ட நிர்வாகத்திற்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய
நிபந்தனையுமின்றி கடந்த நான்காண்டுகளாக ஆதரவளித்து வருகின்றது. இந்த அரசாங்கம்தான் வடக்கு-கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு
நிதியொதுக்கீடு செய்தது. அந்த நிதியொதுக்கீட்டிற்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தனது ஆதரவினையும் வழங்கியது. அத்துடன் நில்லாமல் புதிய
அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள
பௌத்தத்திற்கான முதலிடத்தை தமிழர்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று
கூட்டமைப்பின் பேச்சாளர் தமிழ் மக்கள் சார்ந்து கருத்து தெரிவித்தார்.

இன்று அதற்கான விலையை தமிழ் மக்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்புச்
செயலாளர் பிக்குகள் அவமதிக்கப்பட்டமையே பிரச்சினைகளுக்குக்காரணம் என்று
கூறியிருப்பதுடன் தான் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என்றும்
கூறியிருக்கிறார். ஆனால் சம்பவ இடத்தில் சட்டத்தரணிகள்மீது
புத்தபிக்குகளும் அவருடன் வந்தவர்களுமே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்
மூலம் தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டாலும் தற்போதைய நிலையில்
மாற்றமிருக்காது என்று கோத்தபாய கூறியிருக்கிறார்.

நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டு தான் நினைத்ததை நடத்தி முடித்த ஞானசாரரோ
நீதிமன்ற உத்தரவு தாமதமாக வந்ததைக் காரணம் காட்டுகிறார். இறைவன் புகழை
மட்டுமே உயர்த்திப் பிடிக்க வேண்டிய துறவி பிறமத கடவுளின் ஆலய வளாகத்தில்
அவர்கள் அபச்சாரமாகக் கருதும் விடயத்தை செய்வது நியாயமானதா?தர்மத்திற்குட்பட்டதா? என்பது முதலாவது கேள்வி.

இறைத்தன்மையை மதிக்க வேண்டிய ஒருவர் நீதிமன்றத்தின் உத்தரவு தாமதாக
வந்ததாகக் கூறுவதுஏற்புடையதா? நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததற்காக
இலங்கையின் பிரஜையான
ஞானசாரர்மீது இலங்கையின் நீதித்துறை எத்தகைய நடவடிக்கையை
எடுக்கப்போகிறது? இதற்காக இலங்கை நீதித்துறை ஊழியர்கள் எத்தகைய
பங்களிப்பை வழங்கப்போகிறார்கள்?

இலங்கையில் ஐக்கியமும் நல்லிணக்கமும் பேணப்படவேண்டும் என்று கோரிவந்த
சர்வதேச சமூகம் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நாம்
நல்லிணக்கத்திற்கும் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அளித்த
ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நாம்
ஒன்றுபட்டு வாழ விரும்புகிறோம் என்று சொன்னாலும் எம்மை தங்களுடன் சமமாகக்
கருதுவதற்கு இலங்கையின் சிங்கள மேலாதிக்க சக்திகள் விரும்பவில்லை. சரி
எங்களுடன் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் எங்களை எங்கள் போக்கில்
விட்டுவிடுங்கள் என்றாலும் சிங்கள ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை.இந்நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சர்வதேச சமூகமும் இலங்கையின் ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர்?

ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் எந்தவொரு பிரச்சினைக்கும்
இலங்கைக்குள் தீர்வு கிட்டாது என்பதுடன் எமது இனத்தின் பாதுகாப்பிற்கும்
உத்தரவாதம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட மாட்டார்கள்
என்று இதுவரை கூறிவந்த ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசத்தில் சிங்கள பௌத்த
மேலாதிக்க வாதிகள் மேற்கொள்ளும் எத்தகைய அடாவடித்தனத்திற்கும்
நீதிகிடைக்காது என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில்,அழிவின் விளிம்பிலிருக்கும் தமிழ்த் தேசிய இனத்திற்கு
உரிய நீதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது சர்வதேசத்தின்
கடமையாகும். இந்தக் கடமையை சர்வதேச சமூகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும்
என்பதே எமது வேண்டுகோளாகும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments