Header Ads

test

வவுனியா வடக்கில் காணப்படும் வெடுக்குநாறி மலையில் உள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டு சொல்லும் விடயம் என்ன.!!!

வவுனியா வடக்கில் காணப்படும் வெடுக்குநாறி மலையில் உள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டு சொல்லும் விடயம் என்ன.!!!

தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக் காலத்தில் அதாவது கி.மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறையாகும் இப் பிராமி எழுத்துக்கள் குகைப்படுக்கைகள், மட்கல ஓடுகள்,  முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், ஆகியவற்றிலிருந்து தமிழ்நாடு, கேரளா, இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களில் இருந்து தமிழ் பிராமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இலங்கையிலும் பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுகள் குகைப்படுக்கைகளிலேயே காணப்படுகின்றது. தமிழகத்தில் காணப்படும் குகைப் படுகைகளில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் சமண சமயம் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. அதேபோல் இலங்கையில் காணப்படும் குகைப் படுக்கை கல்வெட்டுக்கள் பௌத்த சமயம் சார்பான விடயங்களையே வெளிப்படுத்துகின்றது.

தமிழகத்தில் சங்க காலம் நிலவிய காலத்தில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. எனவே இலங்கை வணிகர்கள் வர்த்தக நிமிர்த்தமாக தமிழகம் சென்று சமணத்துறவிகளுக்கு குகைப் படுக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். உதாரணமாக:- திருப்பரங்குன்றம் கல்வெட்டில் "ஈழக் குடும்பிகன்" எனப்படும் இலங்கையைச் சேர்ந்த வணிகன் சமணத் துறவி வாழ்வதற்கான குகைப் படுக்கை அமைத்து கொடுத்தான் என்பது பற்றிக் கூறுகின்றது.

அதேபோன்றுதான் வெடுக்கு நாறி மலையில் இரண்டு குகைப் படுக்கைகள் உள்ளது. அதில் முதலாவது குகைத்தளத்தின் மேலே உள்ள தமிழ் பிராமி கல்வெட்டானது. அக் குகைத்தளம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது. என்ற தகவலை கூறுகின்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த "மகா சமுதஹ" எனப்படும் வணிகக் குழுவை சேர்ந்த ஒருவரினால் இக்குகைத்தளம் ஒரு பௌத்த துறவிக்கு தானமாக வழங்கப்பட்டது பற்றிய தகவலை வெளிப்படுத்துகின்றது.

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்  பானை ஓடு ஒன்றில் "சமுத" , "சமுதஹ" என்ற இரண்டு பெயர்கள் காணப்படுகின்றது. எனவே இவ்விரு இடங்களில் காணப்படும் பெயர்களின் ஒற்றுமை கருதி வெடுக்குநாறி குகைப் படுக்கையை தமிழக வணிகனால் அமைத்துக் கொடுக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது.

    தகவல்:
 - நெடுங்கேணி சானுஜன் -




No comments