Header Ads

test

புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைக்கு மைத்திரி,ரணில்,மஹிந்த கூட்டுப்பொறுப்பாளிகள் - 70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி.!!!

புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைக்கு 
மைத்திரி,ரணில்,மஹிந்த கூட்டுப்பொறுப்பாளிகள் - 

70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி.!!!


புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைப்பு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய மூவருமே தான் காரணமாகின்றார்கள். இதில் ஒருவரைக் பிணையெடுத்து மற்றவரை முன்னிறுத்தவே முடியாது என்று ஈழமக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின்போது 70நிமிடங்கள் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை ஆட்சியில் உள்ள எந்தவொரு உறுப்பினராவது பொருட்படுத்தினார்களா. இதனை மாவை.சேனாதிராஜா ஏன் மறந்து விட்டார் என்றும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளை மைத்திரி, மஹிந்த கூட்டணியே தோற்கடித்தது என்றும் தேர்தலுக்காக தற்போது தமிழ் மக்களின் ஆதரவை திரட்ட அவர்கள் விளைவதாகவும் குற்றம் சாட்டியிருந்ததோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்து எவ்விதமான கருத்துக்களையும் முன்வைத்திருக்கவில்லை.

இந்நிலையில் அவ்விடயம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சிவசக்தி ஆனந்தன் எம்.பி மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றியது முதல் தற்போது அவர்களுக்கு முண்டுகொடுப்பது வரையில் அனைத்து செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் எந்தவொரு அனுமதியையும் பெறாத நிலையிலேயே கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சியினர் தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து விலகி தமிழ்த் தேசிய நீக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் சரணாகதி அடைந்து விட்டார்கள்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்டுபாடுகள் எல்லாவற்றையும் கைவிட்டு முற்று முழுதாகவே அபிவிருத்தி என்றபோர்வையில் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை வைத்து தாமே செய்ததாக உரிமைகோரிக்கொண்டு மக்களை முட்;டாளக்கும் செயற்பாடுகளை செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளானர்.

தற்போது தேர்தலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு பணிகளை மைத்திரி தோற்கடித்துவிட்டார். மஹிந்த எதிராக பிரசாரம் செய்துவிட்டார். எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் கதைகூற ஆரம்பித்து விட்டனர் கூட்டமைப்பினர்.

கொள்கைகளை கைவிட்டு நிபந்தனையற்ற விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஆதரவினை வழங்கி ஆட்சியாளர்களுடன் சரணாகதியடையும்போதே இத்தகைய இராஜதந்திரம் தோல்வியைச் சந்திக்கும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எம்மை எதிராளிகளாக மாற்றிவிட்டு அதேபாதையில் கூட்டமைப்பு பயணித்தது. ஆனால் தற்போது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே கூட்டமைப்பினதும், சம்பந்தனினதும் இராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று பகிரங்கமாக கூறுமளவிற்கு நிலைமை வந்துள்ளது.

ஆகவே சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழர்களை 70 வருடங்களாக ஏமாற்றுகின்ற நிலையில் தற்போதும் ஏமாற்றியுள்ளமை என்பது புதிய விடயம் அல்ல. ஆனால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாது ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தான் யதார்த்தமாகும்.

இதனைவிட, பொறுப்புக்கூறலிலிருந்து சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினை வரையில் எதனையுமே கருத்திலெடுக்காது அவற்றை சில்லறை விடயங்கள் என்று கூறிவிட்டு, புதிய அரசியலமைப்பு வரும் என்று பாரிய எதிர்பார்ப்பினை தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பே ஏற்படுத்தியது.

ஈற்றில் புதிய அரசியலமைப்பு வரவில்லை. மேலும் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி கட்டமைப்பு மாற்றப்பட்டதாக இல்லை, பௌத்த மதத்தின் வீச்சு குறைக்கப்பட்டதாக இல்லை, அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு பதிலாக செனட்சபை முன்மொழிவின் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டே இருக்கின்ற நிலைமைகள் தான் காணப்பட்டது.

எந்தகோட்பாட்டிற்காக தமிழ் மக்கள் தமது ஆணையை கூட்டமைப்புக்கு வழங்கினார்களோ அவற்றையெல்லாம்  கொண்டிருக்காத புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் என்ன? நிறைவேற்றப்படவில்லையென்றால் என்ன?

சொற்ப விடயங்களை உள்வாங்கி ஒற்றையாட்சிக்குள் சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதை கட்டமைப்பாக கொண்டிருந்த புதிய அரசியலமைப்பினை யார் நடைமுறைப்படுத்துவது. அதற்கான பெயரை யார் பொறுப்பேற்பது என்பதில் ஏற்பட்ட போட்டியால் தான் மைத்திரி, மஹிந்த, ரணில் அதனை நிறைவேற்ற முன்வரவில்லை.

அதனைவிட, தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு எவ்விதமான கரிசனையும் கிடையாது. மேலும் புதிய அரசியலமைப்பு கிடப்பில்போடப்பட்ட பின்னர் கூட்டமைப்பு கொண்டுவந்திருந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது தமிழர்களின் மூத்த தலைவரான சம்பந்தன் எழுபது நிமிடங்கள் எழுந்து நின்று தமிழர்களின் எழுபது வருடகால பிரச்சினைக்கு தீர்வு கோரி புதிய அரசியலமைப்பினை வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் எந்தவவொரு உறுப்பினரானவது அதற்கு செவிசாய்தாரா? ஆகக்குறைந்தது வயதில் மூத்த அரசியல்வாதி என்று கருதியாவது, கூட்டமைப்பு முண்டுகொடுத்துவரும் அரசங்கம் பதிலளித்ததா? இதன்மூலம் தென்னிலங்கையின் மனநிலையை மாவை.சேனாதிராஜா போன்றவர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.

தென்னிலங்கையின் ஒருதரப்புடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டும் மற்றையை தரப்பினை விமர்ச்சித்து தமிழ் மக்கள் மத்தியில் தமக்கான அனுதாப வாக்குகளை பெற விளைவதானது மூன்றாம் நிலை அரசியல் செயற்பாடாகும். தென்னிலங்கையின் அனைத்து தலைவர்களுமே புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏமாற்றியுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

இதனை பகிரங்கமாக கூறாது ஒருதரப்பினருக்கு ஆதரவளித்து அவர்களுக்கு பல்லக்குத் தூக்க விளைவதானது சுயலாப அரசியல் என்பதோடு ஒரு இனத்தின் விடுதலையை பயணத்தினையும் குழிதோண்டி புதைப்பதற்கு சமமானது என்றுள்ளது.   

No comments