Header Ads

test

மத்தியில் பங்குதாரர் ஆனாலும் மாநிலத்தில் சுயமாகவே முடிவெடுப்பேன் – பா.உ டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.!!!

மத்தியில் பங்குதாரர் ஆனாலும் மாநிலத்தில் சுயமாகவே முடிவெடுப்பேன் – பா.உ டக்ளஸ் தேவானந்தா  தெரிவிப்பு.!!!


வரவுள்ள தேர்தல்களில் மத்தியிலுள்ள கட்சிகளுடன் உடன்பாடுகளை செய்து பங்குதாரர் ஆகி செயற்பாட்டாலும் மாநில ஆட்சியில் சுயமாகவே நான் முடிவெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (29) குறித்த மாவட்டம் மற்றும் பிரதேசங்களின் நிர்வாக செயலாளர்கள், செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாரை நாம் ஆதரிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அவர்களின் ஊடாக  எமது மக்களுக்கு எதனை சாதித்து கொடுக்கலாம் என்பதில்தான் நாம் அக்கறை செலுத்தவேண்டும்.

கடந்த காலங்களில் நாம் அரசியல் பலத்தை அதிகமாக கொண்டிருக்காது விட்டாலும் மத்தியில் அமைந்த அரசுகளுடன் நாம் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக எண்ணிலடங்காத சேவைகளை செய்து சாதித்துக்  காட்டியிருக்கின்றோம்.

நாம் எம்மீதுள்ள நம்பிக்கையில் தான் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மக்களுக்கு வாக்குறுதிகளாக கொடுத்து அவற்றை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அதேபோல இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளோம்.

கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்த மதிநுட்ப அரசியல் நகர்வுகளால்தான் அழிவு யுத்தம் எமது மக்களை அழித்துக்கொண்டிருந்த போதும் சரி அது முடிவுக்கு வந்த பின்னரும் சரி வடக்கில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்துமுடிக்க மட்டுமல்லாது பறிக்கப்படவிருந்த எமது மக்களின் பல உரிமைகளையும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் இவற்றில் அதிகமானவற்றை சாதித்துக் காட்டியிருந்தோம்.

அந்தவகையில் மத்தியில் யாருடன் பங்காளிகளாக நாம் இருந்தாலும் மாநிலத்தில் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அபிலாசைகளுக்கு தீர்வை கண்டு கொடுப்பதில் நாம் எமது தனித்துவத்துடன் தான் செயற்படுவோம். அதிலிருந்து நாம் பின்வாங்கப்போவதில்லை.

மத்தியில் பங்குதாரராவதனூடாக இது ஒருபோதும் தடைப்பட்டும் போகாது என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் வரவுள்ள தேர்தல்களில் நம்பிக்கையுடன் எமது மக்கள் நாம் முன்நிறுத்துபவர்களை வெற்றிபெறச் செய்து எம்மை பலப்படுத்துவார்களானால் இவற்றை சாதித்துக்காட்ட என்னால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



No comments