Header Ads

test

அப்பாவி மக்களை இலக்குவைத்து எவராவது தங்களது வயிறுகளை நிரப்பிக் கொள்ள முனைவதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் டக்ளஸ் தேவானந்தா கவலை தெரிவிப்பு.!!!

அப்பாவி மக்களை இலக்குவைத்து எவராவது தங்களது வயிறுகளை நிரப்பிக் கொள்ள முனைவதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் டக்ளஸ்  தேவானந்தா  கவலை தெரிவிப்பு.!!!

எமது மக்கள் தாமாகவே நோயாளிகளாக ஆகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. எமது மக்களை நோயாளிகளாக ஆக்குகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு.

நோயாளிகளான மக்கள் தங்களுக்கான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன என்ற நம்பிக்கையில் அங்கு செல்கின்றபோது, அந்த அப்பாவி மக்களை இலக்குவைத்து எவராவது தங்களது வயிறுகளை நிரப்பிக் கொள்ள முனைவதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

பின்னணியில் இருக்கின்ற வியாபாரிகளுக்காக முன்னிலையில் வந்து, மக்களுக்கு பல்வேறு சலுகைகளை - இலவசங்களை – வசதிகளை தருகின்றோமெனக் கூறிக் கொண்ட ஏமாற்றுத்தனங்கள் மேற்கொள்ளப்படுமாயின், அவை எந்தத் துறைகளிலிருந்தாலும், அவை அடியோடு அக்கறப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையிலும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாக சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, முரண்பட்ட ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதிலிருந்து மக்களுக்கான செயற்பாட்டு வெளிப்பாடுகளை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வதென்பது சிக்கலான விடயமாகி இருக்கின்றது.

அதேநேரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற MRI  இயந்திர உபகரணங்கள் தொடர்பில் ஒரு விடயம் கூறப்படுகின்றது.

மேற்படி இயந்திர உபகரணங்கள் இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம், வன்னி போன்ற பகுதிகளிலிருந்து இருதய மற்றும் புற்றுநோய் நோயாளர்கள் கொழும்புக்கு வரவேண்டிய நிலையே ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எமது புலம்பெயர் சமூகத்திலிருந்து சில நலன்விரும்பிகள் மேற்படி இயந்திர உபகரணங்களை ஜேர்மன் நாட்டில் வாங்கி, அன்பளிப்பு செய்வதற்குத் தயாராக இருந்த நிலையில்,

அவை ஜப்பான் அரசின் மூலமாக நவீன கட்டிடத்துடன் தரப் போவதாகவும், தவிர இத்தகைய அன்பளிப்புகள் மூலமாக அவை தரப்பட்டால் அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் சேவை செய்கின்ற செலவுகளை அரசாங்கம் தரமாட்டாது என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தரப்பு கூறியிருந்த நிலையில்,

தாங்கள் அந்த முயற்சியை கைவிட்டதாகவும், பின்னர் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும்,

இதன்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேற்படி  MRI  இயந்திர உபகரணங்கள் வாங்குவதற்கு 130 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்,

மேலும் 12 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என்றும் தற்போதைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிகாரியின் சார்பில் அவரது வைத்திய நண்பர் ஒருவரால் கூறப்பட்டு நிதி கோரப்பட்டதாகவும்,

இந்தியா அன்பளிப்பாக வழங்கிய இயந்திரம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருப்பதாகவும், அது இலங்கைத் தரத்திலும் இல்லை, அவுஸ்திரேலிய தரத்திலும் இல்லை என அங்கு கூறப்பட்டதாகவும் மேற்படி நலன்விரும்பிகள் கடிதம் மூலமாக எனக்கு அறிவித்துள்ளனர்.

மேற்படி இயந்திர உபகரணங்களை ஜப்பான் அரசு வழங்கியதா? இல்லையா? என்ற கேள்வி இப்போது எமது மக்களிடையே எழுந்துள்ளது.

வழங்கவில்லை எனில், ஏன்? என்ற கேள்வியும், வழங்கியிருந்தால் அது எங்கே? என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன்னர் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையினைச் செலவு செய்து மேற்படி நலன்விரும்பிகள் வாங்கித் தரவிருந்ததை மறுத்துவிட்டு,

அவற்றுக்கான பராமரிப்புச் செலவுகளை அரசு ஏற்காது எனக் கூறப்பட்டதாகத் தெரிய வருகின்ற நிலையில்,

இப்போது அதனை வெளியில் வாங்கினால் மட்டும் அரசாங்கம் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுமா? என்ற கேள்வியும் எமது மக்களிடத்தே இருக்கின்றது.

எனவே இதன் உண்மைத் தண்மை குறித்து சுகாதார அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுகின்றேன் என கவலை தெரிவித்துள்ளார்.

No comments