Header Ads

test

அல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு.!!!

அல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு.!!!


அல்லை விவசாயி கிரிசனின் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று 12.08.2019 மதியம் 12.30 மணியளவில் இலக்கம் - 384 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து 
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி விற்பனை நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை  வகைகள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் ஒருங்கிணைந்த விற்பனை நிலையமாக இது உருவெடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிசன் என்கிற தனி இளைஞரின் உழைப்பால் இந்த இயற்கை விற்பனை நிலையம் சிறப்பாக உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிக்கூட்டு கோபுர வீதியில் பெருமாள் கோவிலுக்கு அருகில் சிறிய நிலையமாக இயங்கிவந்த அல்லைவிவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் விரிவுபடுத்தப்பட்டு  புதிய முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் விளைந்த ஆரோக்கியமான உணவுகளை சமைத்து வழங்கும் நிலையமாக மிக விரைவில்  செயற்படவுள்ளது.

நிகழ்வில் பங்கேற்று யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டு வருடத்துக்கு முதலும் பெருமாள் கோவிலடியில் அவரது முதல் விற்பனை நிலையத்தை நானே தொடக்கி வைத்தேன். இயற்கை முறைக்கு மாற வேண்டும் என சொல்வோர் இன்று அதிகமாக உள்ளனர். ஆனால் செயற்படுவோர் கிரிசனைப் போல் வெகுசிலர் தான் உள்ளனர். உண்மையில் இயற்கையில் விளைந்ததை உறுதிப்படுத்தி வாங்கும் நம்பிக்கையான இயற்கை விவசாயிகள் தான் இன்று தேவை. அதில் ஒரு இளைஞராக கிரிசன் ஆர்வமுடன் செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. கிரிசனின் அப்பாவும் முதலில் இரசாயன விவசாயம் செய்திருக்கிறார். பின்னர் கிரிசன் தான் அப்பாவையும் மாற்றி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வந்ததாக நான் கேள்விப்பட்டேன்.  இப்படியான மாற்றங்கள் தான் இன்று தேவையாகவுள்ளது. அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அல்லை விவசாயி கிரிசன் கருத்து தெரிவிக்கையில்,
50 க்கும் மேற்பட்ட விழிப்புணர்வுக் கண்காட்சிகளை இரண்டாண்டுகளில் நடத்தியிருக்கிறேன்.  இயற்கை முறையில் வீட்டுத்தோட்டங்களை அமைப்பதன்  மூலமும்  ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம். எனது விற்பனை நிலையத்தில் இயற்கையில் விளைந்த மரக்கறிகள், உள்ளூர் உற்பத்திப் பொருள்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நான் என்றுமே உதவிக்கரமாக இருப்பேன்.

இறுதியாக இஞ்சி கலந்த கற்றாழை சாறும், சூடான இலைக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் இயற்கை விவசாய முயற்சிகளில் முன்னோடி இளைஞர்களில் ஒருவராக கிரிசன் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments