உண்ணாவிரதத்தை நீர் கொடுத்து அமைச்சர் மனோ கணேசன் நிறைவுசெய்து வைத்துள்ளார்.!!!
உண்ணாவிரதத்தை நீர் கொடுத்து அமைச்சர் மனோ கணேசன் நிறைவுசெய்து வைத்துள்ளார்.!!!
மகசின் சிறைச்சாலையில் நீர் ஆகாரம் கூட அருந்தாத நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் அதிகாரியாகிய அரசியல் கைதியொருவர் கடந்த 15 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உண்ணாவிரதத்தை நீர் கொடுத்து அமைச்சர் மனோ கணேசன் நிறைவுசெய்து வைத்துள்ளார்.
புதிய மகசீன் சிறைச்சாலைக்கு அமைச்சர் மனோ கணேசனும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி முதல் குறித்த கைதி, தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து அதிகாலை முதல் நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய நெல்லியடியைச் சேர்ந்த அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தவராவார்.
கைதியின் உண்ணாவிரதத்தை நீர் ஆகாரம் கொடுத்து நிறைவுசெய்தபின்னர் அமைச்சர் மனோகணேசன் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவைப்பத்திரத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாரிப்பாதாகவும் இரு வாரங்களில் இது குறித்த பத்திரத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
இதேநேரம் கனகசபை தேவதாசனின் கோரிக்கைகள் தொடர்பில் தான் கவனமெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கனகசபை தேவதாசன் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தேவதாசனுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர், தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக நீதி அமைச்சின் அதிகாரம் வாய்ந்த அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி கடிதங்கள் எழுதியிருந்த போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்திருந்தார்.
ஆயினும் கைதிகளின் கடிதங்களை அனுப்புவது சிறைச்சாலை அதிகாரிகளின் வேலையல்ல எனக் கூறியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படியும், மேன் முறையீட்டு வழக்கில் பார்த்துக் கொள்ளும்படியும் உண்ணாவிரதம் இருக்கின்ற தேவதாசனை வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால் அது தனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்து, அவர் தனது போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்த நிலையில் குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment