Header Ads

test

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றிவிட்டது-மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றிவிட்டது-மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.!!!



தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை மிகவும் கடுமையாக ஏமாற்றி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நான் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று செயற்பட நினைத்ததாக பலர் குறிப்பிடுகின்றனர்.

நான் அதனை இன்றும் ஏற்றுக் கொள்கின்றேன். நான் இதனூடாக பாராளுமன்றில் இரண் டாவது சபை ஒன்றை ஏற்படுத்தி பிரதேச சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு தீர்மானித்தேன்.

அதற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளே 13 பிளஸ் என பெயரிட்டனர். எனினும் அந்த தேர்தல் முறைமாற்றத்தை கொண்டு வந்தவர்களே அதற்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றனர்.

ஆகவே அதற்கு நாம் இணக்கம் தெரிவிக்க முடியாது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் பாராளுமன்றில் சமர்ப்பித்த அறிக்கை எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலரால் உருவாக்கப்பட்டது என ஒரு பேச்சு காணப்படுகின்றது.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு குறித்த அறிக்கை தம்முடையது அல்லவென பிரதமர் குறிப்பிட்டார்.

ஆகவே இறுதியில் பார்க்கையில் அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏமாற்று வேலையை செய்திருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடித்த நாடகமும் இல்லை, அடித்த தாளமும் இல்லை.

சுமந்திரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரைபுகளை தனிநாடு என்ற விடயத்தை உள்ளடக்கியே உருவாக்குவார். அவர்களது நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு இளைஞர்கள் தம்முடைய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில் முதலில் விடுதலையை பெற்றுக் கொண்டு பின்னர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனத் தெரிவித்துள்ளதாக செய்திகள் அறியக்கிடைக்கின்றன.

இதற்காகவே அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. எனினும் அவர் விடுதலையும் பெறவில்லை. மக்களுக்கு எதுவும் கிடைக்கவும் இல்லை.

தமிழ் மக்கள் வடக்கு கிழக்கை தனியாக நிர்வகிப்பதே அவர்கள் விடுதலை என குறிப்பிடுகின்றனர்.

நான் 2014 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்து உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தேன். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டனர்.

19ஆவது திருத்தச் சட்டத்தின் குழு கூட்டத்தின் போது எவருக்கும் தெரியாமல் வரைபில் காணப்பட்ட வார்த்தைகளை அகற்றினர்.

 அதனால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின் காரணமாக எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் யாப்பு திருத்தத்திற்கு இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இயலாது.

அதேபோல் அரசாங்கத்தின் இறுதி காலத்தில் யாப்பு திருத்தம் தொடர்பில் பேசி பிரயோசனம் இல்லை. ஆகவே மக்களின் வாக்குகளினால் புதிதாக உருவாகும் அர சாங்கமே அந்த விடயத்தை செயற்படுத்த வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது யாப்புத் திருத்தம் தொடர்பில் நாம் முன் மொழிவுகளை வைக்கவுள்ளோம்.

புதிய அரசாங்கத்தின் ஊடாக யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள எதிர் பார்க்கின்றோம்.

மக்கள் வாக்கெடுப்பின்றி யாப்பினை மாற்றியமைப்போம் என மக்களை ஏமாற்ற மாட்டோம். புதிய யாப்புத் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.


No comments